நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எந்த அணியில் சேர்வது என்ற குழப்பான நிலையில் இருந்தார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. எங்கிருந்தும் அழைப்பு வரவில்லை என்றாலும், அதிமுக அணியிலே சேருவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரது பெயரில் வெளியான அறிக்கையில் அதிமுக உடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது அது போலியான அறிக்கை என்று.
இதையடுத்து, தென்காசி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கி புதிய தமிழகத்தை அதிமுக கூட்டணியில் சேர்த்து கொண்டது. "தேவேந்திரகுல சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். 6 சமூக உட்பிரிவுகளையும் உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக" கிருஷ்ணசாமி விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு மேற்கொண்டு பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், நேற்று பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கிருஷ்ணசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அதிமுக அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் 3 மாத காலம் பொறுத்திருந்தோம். ஆனால், இனியும் நாங்கள் காத்திருக்கமாட்டோம். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட அரசாணை வெளியிட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்றார்.”
கிருஷ்ணசாமியின் பேச்சு எடப்பாடி அரசிற்கு எச்சரிக்கை என்று சொல்வதை விட, அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுகிறது என்றே எடுத்துக் கொள்ளலாமா?