பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05/01/2022) பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இதன் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் நரேந்திர மோடி சிக்கிக்கொண்டார். பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, "என் செயலருக்கு கரோனா உறுதியானதால் பிரதமரை வரவேற்க செல்ல முடியவில்லை. பிரதமர் வருகையையொட்டி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நமது பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க. இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியை தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓராண்டு காலம் கடுங்குளிரிலும், மழையிலும் போராடி 700 விவசாயிகள் மடிந்ததை, மோடி அமைச்சர் மகன் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்ததை விவசாயிகள் மறக்கவில்லை என்பதை மோடி உணர வேண்டும்.
மக்கள் எளியவர்களாக இருக்கலாம், ஆனால் வலிமையானவர்கள். அதிகாரம் வலிமையானது போல் தோன்றலாம். ஆனால் மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதே வரலாறு. 20 நிமிடம் காத்துக்கிடந்ததற்கே பிரதமரும், பா.ஜ.க.வும் கொந்தளிக்கிறார்கள். ஓராண்டு போராடிய விவசாயிகள் எவ்வளவு துயரப் பட்டிருப்பார்கள்!
மாநில அரசு மட்டுமல்ல ஒன்றிய உள்துறை அமைச்சகமும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையும் பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள். மிக திட்டமிட்டு, கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பிரதமரின் பாதுகாப்பு அதிமுக்கியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.