சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் உள்ள குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த கட்டடத்தின் தூண்கள், சுவர் மோசமான நிலையில் இருக்கிறது. இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், இந்த அடுக்குமாடி கட்டடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதாகும். கட்டடத்தில் லிஃப்ட் இயங்கவில்லை; குடிநீர், கழிவு நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. கட்டடத்தின் உறுதித் தன்மையில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மக்கள் குடியேற அரசு அனுமதி தரவில்லை; அவர்களாகவே குடியேறியுள்ளனர். சிமெண்ட் பூச்சில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு வருகிறது; ஆய்வுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஐ.டி. குழுவின் அறிக்கைக்குப் பின் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.