கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன. முதற்கட்டமாக 764 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 1,056 வீடுகளும் என மொத்தம் 1,820 வீடுகள் கட்டப்பட்டன. கூவம், அடையாறு மற்றும் பக்கிங் கால்வாய் அருகே குடிசைகளில் வசிப்பவர்கள் பயனாளிகளாக அந்தக் குடியிருப்பில் குடியேறி இரண்டு - மூன்று மாதங்களே ஆகும் நிலையில், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் இருப்பதாக அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர்.
அலமாரிகளில் பொருட்களை வைக்க முடியாத அளவிற்கு தரமற்ற முறையில் இருக்கிறது. அதேபோல் படிக்கட்டுகளில் நடந்தால் கூட இடிந்துவிடுமோ என எண்ணும் அளவிற்குத் தரமற்றதாக உள்ளது. பயன்பாட்டிற்காக வீட்டினுள் ஆணி அடிக்க முடியவில்லை என வீடியோ ஆதாரங்களோடு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுபற்றி பயனாளி ஒருவர் கூறுகையில், ''செல்ஃபில் ஏதாவது வைத்தால் கூட பலபலவென்று கொட்டுது. அது உறுதி கிடையாது. சும்மா பொம்மை கல்யாணம் பண்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. இத்தனை வீடு கட்டிக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் இதில் கையை வைத்தால் எல்லாம் உதிர்ந்து கொட்டுகிறது. உயிருக்கு உத்தரவாதம் யார்? நீங்கள் இருப்பீர்களா உத்தரவாதமாக?'' என்றார்.
இந்தக் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் தெரிவித்துவந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அத்தொகுதியின் திமுக எம்எல்ஏ பரந்தாமன் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதேபோல் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ பரந்தாமன் சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
''முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கட்டட ஒப்பந்ததாரர் மீதும் கிரிமினல் நடவடிக்கை தேவை'' என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
''ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இது. கட்டுமானப் பணியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பன்னடுக்கு கட்டடம் தொடர்பாக யார் முறைகேடு செய்திருந்தாலும் முதல்வர் வேடிக்கை பார்க்க மாட்டார்'' என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேரவையில் தெரிவித்துள்ளார்.