புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் ஸ்டெல்லா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நீலாவதி (வயது 28) என்ற பெண் தலையில் காயங்களுடன் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். வீட்டின் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. நீலாவதியின் மகள் கனிசினி (வயது 7) பொன்னகர் அரசுப் பள்ளியில் இருந்து மதிய நேரத்தில் யாரோ அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் விசாரனை செய்ததில், ‘நாகபட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் செடடிபுலம் கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் விஜயகுமாரும் பனையடிக்குத்தகை பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகள் நீலாவதியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கனிசினி (7) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு நீலாவதி குழந்தையுடன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவான நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகருடன் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை மீட்ட போலீசார் கத்தரிப்புலம் பனையடிக்குத்தகையில் உள்ள நீலாவதியின் தாய் புஸ்பவள்ளியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே நீலாவதி தனது குழந்தையுடன், சந்திரசேகருடன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். இங்கு மேலும் சிலரும் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் 10ஆம் தேதி காலை நீலாவதியின் மகளை அருண்பாண்டியன் என்பவர் பொன்நகர் அரசுப் பள்ளியில் விட்டுச் சென்ற நிலையில் 12.30 மணிக்கு அந்த மாணவியை சந்திரசேகர் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார். மாலையில் நீலாவதி வீட்டில் யாரும் நடமாட்டம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்க்க வெளியே பூட்டி இருந்த வீட்டில் ஜன்னல் வழியாகப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள் உள்ளே நீலாவதி தலையில் காயத்துடன் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். உடனே போலிசாருக்கும் கிராம நிர்வாக அலுவலர் சொக்கையாராஜாவுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்து சடலத்தை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மாணவி என்ன ஆனார் என்று போலிசார் தேடிக் கொண்டிருக்கும் போது சந்திரசேகர், அந்த மாணவியை கத்தரிப்புலத்தில் உள்ள நீலாவதியின் தாயார் வீடு அருகே விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த மணமேல்குடி போலிசார் பள்ளியில் இருந்து மாணவியை அழைத்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர். மேலும் இன்று (11.09.2024) மாலை நீலாவதி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது தாயார் புஷ்பவள்ளியிடம் ஒப்படைத்தனர். இறுதிச் சடங்குகள் செய்ய முடியாத நிலையில் நீலாவதி உடலைபுதுக்கோட்டை போஸ்நகர் மினமயானத்தில் தகனம் செய்துள்ளனர். தாய் சடலமாக கிடக்கும் நிலையில் அரசுப்பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற நபரை போலிசார் தேடி வருகின்றனர். அந்த நபர் கைது செய்யப்படும் போது தான் நீலாவதியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது முழுமையாக தெரிய வரும். இந்த நிலையில் பள்ளியில் இருந்த மாணவியை வெளி நபரிடம் எப்படி அனுபபினார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.