Skip to main content

கடைமடைக்கு போகுமா தண்ணீர்; கேள்விக்குறியாக்கும் பாலம்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடைமடை பாசன கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதா என்று கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வந்து ஆய்வு செய்த முதலமைச்சர் கடந்த 12ந் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து மலர் தூவி வரவேற்றார்.

 

நமது நக்கீரனில் இந்த செய்தி வெளியான போது பிரதான கால்வாய்களில் மராமத்து செய்ய பல இடங்களில் நிதி பெற்றும் கடமைக்கு கண்துடைப்பாக பணி செய்துள்ளதாகவும் தஞ்சை மாவட்டம் ஏனாதிகரம்பையில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரிடம் ரூ. 10 லட்சம் நிதி பெற்று இரும்பு கதவுகள் புதுப்பித்ததாக வைக்கப்பட்ட பதாகையை கூட பொதுமக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஆற்றுப்பக்கமாக திருப்பி வைத்திருந்ததை நக்கீரன் இணையம் சுட்டிக்காட்டிய பிறகு பதாகையை அகற்றியதை பெட்டிச் செய்தியாக கொடுத்திருந்தோம்.

 

முதலமைச்சர் திறந்த தண்ணீர் கல்லணை கால்வாயில் 501 கன அடி எடுத்து இன்று சனிக்கிழமை மாலை ஈச்சங்கோட்டையை கடந்துவிட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை தொட்டுவிடும். நாளை மறுநாள் திங்கட்கிழமை இரவுக்குள் நாகுடி கடந்து கடைசி நீர்த்தேக்கமான மும்பாலை ஏரியை தொட்டுவிடும். அதுவரை கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கூடாது. ஆனால் கல்லணை கால்வாயில் பல இடங்களில் உள்ள சின்னச் சின்ன பழுதுகளை கூட சரி செய்யாததால் மும்பாலை ஏரி வரை குறிப்பிட்ட நாளுக்குள் தண்ணீர் போகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

1935ம் ஆண்டு கட்டப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு நீர்த்தேக்கத்தில் சொர்ணக்காடு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் இரும்பு கதவு உடைந்து நெளிந்து மரக்கட்டையால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பாதி தண்ணீர் சொர்ணக்காடு கிளை வாய்க்காலில் செல்லப் போகிறது. அதே நீர்த்தேக்கத்தில் உள்ள 6 கதவு தடுப்புகள் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கான்கிரீட் கல் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வரும் போது கனரக வாகனங்கள் பாலத்தில் போனால் பாலம் சேதமடையும் ஆபத்தும் உள்ளது. இந்த சின்னச் சின்ன மராமத்துப் பணிகளைக் கூட செய்யாமல் தண்ணீர் எடுப்பதால் என்ன நடக்கப் போகிறதோ?

 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, கல்லணைக் கால்வாய் முழுவதும் தண்ணீர் வீணாகாமல் தடுக்க தரை தளம் அமைத்து நீர்த்தேக்கங்களில் உள்ள பாலங்களை புதுப்பித்து கதவுகள் அமைக்க கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் பல வருடமாக தஞ்சை மாவட்டத்தில் ஊரணிபுரம் வரை கூட முடியவில்லை. இந்த ஒப்பந்தத்தில் தான் பாலம், கதவுகளை புதுப்பிக்க வேண்டும். ஆனால் மேற்பனைக்காடு வரை தரை தளம் அமைக்கும் பணி வர இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகும். அதுவரை இப்படித்தான் பழுதான பாலங்களில் தான் தண்ணீரும் வாகனங்களும் போக வேண்டும் என்கின்றனர்.

 

புதுப்பாலம் அப்புறம் கட்டினாலும் தற்காலிகமாக போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகளாவது செய்தால் தண்ணீரும் வீணாகாது, பாலமும் சேதமாகாது. மக்களும் அச்சமின்றி போகலாம் என்கின்றனர் விவசாயிகள். இது போல இன்னும் எத்தனை பாலங்கள் சேதமோ?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீட்டு யாருக்கு?- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Who is the seat for?- Puducherry Chief Minister Rangasamy interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதேநேரம் புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான தீவிரப் பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன, இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''இந்த தேர்தலில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நம்முடைய புதுச்சேரியினுடைய பாராளுமன்ற இடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று. வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி புதுச்சேரி வருவார்'' எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மாநிலங்களவை இடத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூட்டணிக்கு விட்டுக் கொடுத்திருந்த, நிலையில் மக்களவை இடத்தையும் கூட்டணிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்த இளைஞர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.

The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.