புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சார்ந்த கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என பல இடங்கள் இருந்தாலும் இயற்கையாய் அமைந்த பசுமை நிறைந்த பகுதிகளும் ஏராளம் உள்ளன. இதில் ஒன்றுதான் முத்துக்குடா அலையாத்திக்காடுகள். கடலுக்குள் இந்தக் காடுகள் இருப்பதால் புயல் நேரங்களில் கூட அலையின் வேகத்தைக் குறைத்துப் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீமிசலில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்துக்குடா கிராமம். முழுக்க முழுக்க மீனவ கிராமம். அங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். மீனவப் பெண்கள் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களைச் சேகரிக்கவும் வலைகளைச் சரி செய்தும் உதவிகள் செய்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்தில்தான் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு இணையாகக் கடலுக்குள் சுமார் 3 கி.மீ. சுற்றளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. ஆழமில்லாத கடலில் படகில் சென்று அழகான இயற்கையாய் அமைந்த காடுகளைச் சுற்றிப் பார்க்கக் காடுகளுக்கு நடுவில் இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. நாட்டுப்படகில் காட்டைச் சுற்றி அதன் அழகை ரசிக்க ஒருமணி நேரம் போதாது. அலையாத்திக் காடுகளுக்குள்ளேயே சில இடங்களில் மணல் திட்டுகளும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் பசியாறும் இடமாகவும் அமைந்துள்ளது அந்த திட்டுகள்.
காடுகளுக்கு நடுவே படகில் செல்லும்போது மீன்கள் துள்ளிக்குதித்துச் செல்லும் காட்சிகளையும் கால்வாயில் செல்லும்போது சிறிய நண்டுகள் மரங்களில் செடிகொடிகளில் ஏறித்திரிவதைக் கண்டு ரசிக்கலாம். வெளியூர் பயணிகளுக்கு ஏதுவான சுற்றுலா தலமாக முத்துக்குடா இருந்தாலும் கூட, சுற்றுலாத்துறையோ அரசாங்கமோ பயணிகளுக்கென்று எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. தற்போது இந்த அலையாத்திக்காட்டை மேம்படுத்தி பயணிகள் வந்து செல்லவும் காட்டைச் சுற்றிப் பார்க்கக் கால்வாய் சீரமைப்பு பணிகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். இனிமேல் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். தனியார் அமைப்புகள் மூலமாக முத்துக்குடாவை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் ஆய்வுப் பணிகளில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இதுபோன்ற சிறிய சுற்றுலாத் தலங்களையும் அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டால் அந்தக் கிராமம் மேலும் வளர்ச்சியடையும் என்கிறார்கள் விவரமறிந்த கிராமத்தினர்.