தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கு, மறுபக்கம் வறட்சி, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் குடி தண்ணீருக்காக மக்கள் ஆற்று மணலில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுத்து வந்தனர். தற்போது ஆறுகளில் கிடந்த மணலை கொள்ளையர்கள் திருடிவிட்டதால் ஊற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல் குடம் ரூ. 10 கொடுத்து வாங்கி குடித்து வருகின்றனர். மணலை திருடிய கொள்ளையர்களே தண்ணீரையும் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் என்றால் அறந்தாங்கி அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்களின் தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள ஒரு குளத்தில் மணல் இல்லாத கட்டாந்தரையில் ஊற்று தோண்டி அதில் சொட்டு சொட்டாக ஊறும் தண்ணீரை சேமித்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குடம் தண்ணீர் எடுக்க சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கிறார்கள். இரவு பகலாக தண்ணீருக்காக அந்த குளத்தில் உள்ள ஊற்றில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி என்ற நமது கேள்விக்கு... தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருந்த இளைஞரும், மூதாட்டியும்.. ஊற்றுத் தண்ணி தான் சமைக்க, குடிக்க நல்லா இருக்கும். இந்த குளத்தில் தண்ணீர் நிரைந்தால் ஊற்றில் தண்ணீர் ஊறும். குளத்தில் தண்ணீர் இல்லாத காலத்தில் இரவு பகலாக தண்ணீருக்காக காத்திருப்போம். அந்த நேரங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 10 கொடுத்து வாங்கனும். எல்லாரும் கூலி வேலைக்கு போறவங்க. தண்ணீரை காசு கொடுத்து வாங்கிட்டு அன்றாட செலவுக்கே தடுமாறுவோம். ஆனால் போர்வெல் தண்ணீர் வரும் அதில் சமைத்தால் மறுநாள் காலையில சாதம் கெட்டுப் போகும். அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து சொட்டு சொட்டா தண்ணீர் ஊறும் வரை இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வோம் என்றனர்.