புதுச்சேரி கவர்னர் கிரன்பேடியின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருப்பதை குதூகலமாக கொண்டாடிவருகின்றனர் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர். ஜனநாயகம் வென்றுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்குகின்றனர்.
புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரன்பேடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் காரைக்காலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில், " டெல்லியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண்பேடியை அம்மாநில மக்கள் படு தோல்வியடையச் செய்தனர். தோற்றவருக்கு ஏதாவது பதவி வழங்க வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து புதுச்சேரி கவர்னராக நியமித்தது. அதுதான் எங்க மாநிலத்திற்கு ஆகாத நேரம். கவர்னர் பதவி ஏற்றது முதல் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அதிகாரிகளையும் சுதந்திரமாக மக்கள் நலனுக்காக பாடுபட முடியாத வகையில் இடையூறுகளை கொடுக்கத் தொடங்கினார். புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் திறம்பட பணியாற்ற கூடிய அனுபவசாலிகள் அமைச்சர்களாக இருந்தும் கூட சிறப்பாக செயல்பட முடியாத நிலையே தொடரந்து உறுவாக்கினார். மக்கள் நல்வழி திட்டங்களுக்கு எப்போதுமே முட்டுக்கட்டைகளை கவர்னரே போட்டு வந்தார். ஆட்சியாளர்களும் மக்களும் இதனால் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. முக்கியமான பிரச்சினையான இலவச அரிசி வழங்கலிலும் கடும் இடையூறுகளை கவர்னர் ஏற்படுத்தி புதுச்சேரி மாநில மக்களை பல்வேறு நிலையில் சிரமத்தை சந்திக்க வைத்தார், அவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொண்டார்.
அதோடு தமிழக மக்களின் வாழ்வாதாரமான தண்ணீர் விவகாரத்தில் கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக லோக்சபாவில் காங்கிரஸ் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மக்களை துச்சமாக நினைத்து வந்த அவரது போக்குக்கு சரியான முறையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் ஜனநாயகம் நிச்சயம் வெற்றி பெரும் என்பதை நிரூபித்துள்ளது." என்றார்.