Skip to main content

‘புதன் கிழமைக்கு பிறகு பிரசவ இறப்புகள் இருக்காது’ பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் உத்தரவு

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

Pudhukottai Government Hospital issue

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பிரசவத்திற்காக அதிகமாகக் கர்ப்பிணிகள் வரும் மருத்துவமனை, புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 பேருக்குப் பிரசவம் நடக்கிறது. சிலர் சுகப்பிரசவம் என்றாலும், பலருக்கு அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடக்கிறது. எப்போதாவது ஒருவருக்கு அறுவை சிகிச்சையின்போது பிரச்சனை ஏற்பட்டால், தஞ்சை இராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால், கடந்த 10 நாட்களில் சுமார் 4 கர்ப்பிணிப் பெண்கள் மரணமடைந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த போது, ‘இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு 18 மருத்துவர்கள் வேண்டும். அதாவது ஒரு நேரத்திற்கு 6 மருத்துவர்கள் வீதம் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இவர்கள் முன்னதாக திட்டமிட்ட அறுவை சிகிச்சையும் செய்வார்கள். மேலும் அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து திடீரென வரும் கர்ப்பிணிகளுக்கு அவசரமாக அறுவை சிகிச்சையும் செய்வார்கள். ஆனால், தற்போது 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் 2 பேர் கரோனா உள்ளிட்ட காரணங்களால் விடுப்பில் உள்ளதால், மீதமுள்ள 6 மருத்துவர்கள் மட்டும் தலா 2 பேர் வீதம் சுழற்சி முறையில் பணியில் இருக்கிறார்கள். 

 

இதனால்  மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதனால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 15 அனுபவமுள்ள அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உள்ளதால் அவர்களை வாரத்திற்கு ஒரு மருத்துவரை மாற்றுப்பணிக்கு இராணியார் மருத்துவமனைக்கு அனுப்பினால் எந்த பதற்றமும் இல்லாமல் பிரசவ அறுவைச் சிகிச்சை செய்யலாம். அசம்பாவிதங்கள் நடக்காமலும் தடுக்கலாம். அதே நேரத்தில் விரைவில் பற்றாக்குறையுள்ள மருத்துவர்களையும், மருத்துவப்பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். மேலும் இராணியார் மருத்துவமனைக்கான தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாததால் நகராட்சியில் இருந்து சிறிய டேங்கரில் தண்ணீர் வருகிறது. அதனால் தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. இவற்றை எல்லாம் அரசு சரி செய்தால் நல்லது’ என்றனர்.

 

Pudhukottai Government Hospital issue


ஒரு பணியாளர் நம்மிடம் ரகசியமாக சொன்ன தகவல் இது; ‘இப்படி தொடர்ந்து கர்ப்பிணிகள் இறப்பதால் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரனிடம் ஞாயிற்றுக்கிழமை முறையிட்டோம். புதன் கிழமைக்கு பிறகு இறப்புகள் இருக்காது என்று முனீஸ்வரன் உத்தரவு கொடுத்திருப்பது ஆறுதலாகவும் நிம்மதியாகவும் உள்ளது’ என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?