நீர்நிலைகளில் நிலத்தடி நீரை பாதுகாக்க வாய்கால், குளம், ஆறு, ஏரி, கண்மாய் கரைகளில் பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று இளைஞர்கள் பனை விதை சேகரித்து நடவு செய்து வருகின்றனர்.
கிராமங்களில் இளைஞர்கள் பனை வளர்ப்பில் தீவிரம் காட்டிவரும் நிலையில் தற்போது உள்ள பனை மரங்களை வெட்டவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் பிறந்தநாளில் பனை விதை நடுவதை செய்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள். இப்படியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் ஒன்றியம பதூர் ஊராட்சி காட்டுப்பட்டி கிராமத்தில் நீர்நிலைகளை தூர்வாருவதற்காக கரைக்கு பாதுகாப்பாக இருந்த பனைமரங்களை பொக்கலைன் வைத்து சாய்த்துள்ளனர்.
இதனால் அந்த கிராம இளைஞர்கள் பனை மரங்களை காக்க உதவுங்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பனை விதை நடவில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறும் போது.. பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமிக்கிறது. பனை சாகிறது என்றால் பாலைவனம் ஆகப் போகிறது என்று இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் சொல்லி இருக்கிறார். அதனால் பனை விதைப்பை இயக்கமாக செய்கிறோம். ஆனால் மரங்கள் மீது அக்கரை கொண்ட மாவட்ட ஆட்சியர் கணேஷ் நிர்வாகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கரைக்கு பாதுகாப்பாக உள்ள பனை மரங்களை வெட்டி அழிப்பது வேதனையாக உள்ளது. பனை மரங்களை அகற்றுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.