தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ளார். சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சில் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 22ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.