வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் பஞ்சுப்பேட்டை என்கிற பகுதி 8-வது வார்டில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமலும் குப்பைகள் முறையாகவும் அகற்றப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் அதிக அளவில் நோய் தொற்று ஏற்படக்கூடிய அவலநிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக பலமுறை வாலாஜாபேட்டை நகராட்சியிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை எனச்சொல்லி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா நகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலின்போது, குப்பைகளை அகற்ற கோரியும், கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார கோரியும் கோஷங்களை எழுப்பினர். வாலாஜாபேட்டை காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிததின் பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சனையை அதிகாரிகள் விரைவில் தீர்க்கவில்லையெனில் அடுத்த கட்டமாக நகராட்சி அலுவலகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்தலாம் என நினைக்கிறோம் என்றார்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்.