சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனக சபையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி வழிபட நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்திருந்தனர். இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் எப்போதும் போல் கோவில் உள்ளே உள்ள கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தியது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு கனக சபையில் பக்தர்கள் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வழிபட அரசாணை விதித்தது. அதன் அடிப்படையில் பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவின் போது நான்கு நாட்கள் கனக சபையில் வழிபட அனுமதியில்லை என கனக சபை வாயிலில் பதாகை வைத்து அறிவித்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசாணையை மீறி தீட்சிதர்கள் செயல்பட கூடாது என காவல்துறையினர், வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியதின் பெயரில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபையில் ஏறி வழிபட்டனர்.
இந்த நிலையில் ஆணி திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் 10, 11, 12, 13 ஆகிய நான்கு நாட்கள் கனக சபையில் ஏறி வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தீட்சிதர்கள் அறிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கனக சபையில் வழிபட இடையூறு இருந்தால் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலைத்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 10 ஆம் தேதி காலை முதல் தீட்சிதர்கள் பக்தர்களை கனக சபையில் ஏற்றி வழிபட அனுமதித்தனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கனக சபையில் ஏறி வழிபட தீக்சிதர்கள் ஒரு நபருக்கு ரூபா 100 வசூலித்து அனுப்பி வைத்தனர். தற்போது இன்று கட்டணம் இல்லாமல் கனக சபையில் ஏறி வழிபட அனுமதித்துள்ளனர் இதே போல் தமிழக அரசின் அரசாணைப்படி பக்தர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் வழிபட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கூறுகின்றனர்.