உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க தவறிய மோடிதான் குற்றவாளி என்றும், அதனை எதிர்த்து கேட்க தமிழக அரசுக்கு துணிவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசை கண்டித்து அமைதி வழியில் மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், இளம் பெண்களை கைது செய்துள்ள சென்னை மாநகர காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க தவறியது பிரதமர் மோடி தான் எனவே குற்றவாளி அவர்தான். அவரை விடுத்து அமைதி வழியில் போராடுபவர்களை தடை செய்த இடம் என்று காரணம் காட்டி கைது செய்வது நியாயம்தானா? என்பதை முதல் அமைச்சர் எப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகளுக்கு விளக்க முன்வர வேண்டும்.
மேலாண்மை வாரியம் பெறவும் முடியாது, எதிர்த்து கேட்கவும் துணிவில்லாத தமிழக அரசு காவல்துறையை கொண்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சரியா? மத்திய அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நீதிமன்ற தடையை காரணம் காட்டி முடக்கப் பார்த்த மோடி அரசின் துரோகத்தை தோலுரித்து காட்டி, எந்த நீதிமன்றம் தடை விதித்ததோ - அதே நீதிமன்றத்தை அனுமதிக்க வைத்தது உலக வரலாற்றில் அமைதி வழி மெரினா போராட்டம்தான்.
எனவே அதனை மறந்து விட்டு மெரினா போராட்டம் என்றால் தீவிரவாத செயல் போல் காவல்துறையை பயன்படுத்தி சித்தரிக்க முயற்சிப்பது கண்டிக்கதக்கது. கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.