கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் திடீரென்று தடை விதித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு பகுதியில் அண்மையில் பெய்த மழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவை வறண்டுள்ளன.
இதுமட்டுமின்றி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அருகே, நீர்மின் திட்டத்திற்காக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மலைப்பகுதியில் உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன், பாறைகளை தகர்ப்பதற்காக வைத்த வெடி வெடித்ததில், கற்கள் சிதறி நீர்வீழ்ச்சியில் விழுந்தன. அப்போது நீர்வீழ்ச்சிக்கு கீழே நின்றிருந்த சுற்றுலா பயணிகள் இருவர் மீது கற்கள் விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் வறண்டுள்ள நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கற்கள் விழுந்தது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் 1300 படிக்கட்டுகள் வரை கீழே இறங்கிச்சென்று, நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இவ்வாறு தடை விதித்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.