Skip to main content

இந்த பூச்சாண்டிக்கு அஞ்சுகிற ஆளு நாங்க கிடையாது: பேராசிரியை சுந்தரவள்ளி

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
professor sundaravalli



சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியை சுந்தரவள்ளி, 
 

இந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கு கெத்தா இருக்கு. ஒடுக்க நினைக்கிற அதிகார வர்கத்துக்கு எதிராக களமாடுகிற கூட்டத்தில் நானும் ஒருத்தியாக இவர்களோடு அமர்ந்திருக்கிறேன் என்பதே அந்த கெத்துக்கு காரணம். 
 

அறிவிக்கப்படாத ஒரு பெரிய எமர்ஜென்சி ஓடிக்கொண்டிருக்கிறது. நாடு நாடா சுத்திக்கிட்டு இருக்கிற பிரதமரு, ஒன்னுக்கும் உதவாத ரெண்டு முதல் அமைச்சர்கள். இங்கு நாம் மக்களா இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம் என்பதை உணர்ந்துக்கிட்டே இருப்பேன். 
 

எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் இரண்டு பேர்தான் கருத்து சுதந்தரத்தில் இருக்கிறார்கள். ஒன்று எச்.ராஜா, இன்னொருத்தர் எஸ்.வி.சேகர். மேடை கிடைத்தால், மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். 
 

ஒரு வருஷமா நியூஸ் 7ல் டிபேட்டுக்கு என்னை கூப்பிடுவதில்லை. அங்கு இருக்கும் நண்பரிடம் என்னவென்று விசாரித்தேன். நீங்க பேசிவிட்டு போன பிறகு ஒன்றரை மணி வரை போனை போட்டு திட்டுகிறார்கள். நாங்கள் எவ்வளவுதான் சமாளிக்கிறது என்கிறார்.
 

மனுஷ்யபுத்திரன், சுந்தரவல்லி என 10 பேர் இருக்கிறார்கள். அவர்கள் விவாத்திற்கு வந்தால் நாங்க வரவில்லை என்கிறார்கள். சுந்தரவல்லியா அது ராட்சஷி, மனுஷன் பேசுவானா என்கிறார்கள். நாங்க உங்கள மனுஷன் லிஸ்ட்டிலேயே சேர்க்கல, ஆனா அவர்கள் நம்மள சொல்கிறார்கள். 
 

கிட்டதட்ட 17, 18 வயது இருக்கும் மாணவர் சங்கத்தில் கொடியை பிடித்து போராடும்போது, எனக்கு என்ன தெரியுமா சொல்லிக்கொடுத்தார்கள், நீ பொம்பள புள்ள தெருவுல வந்து நின்னா உன் மேல விழும் முதல் அடி உன்னுடைய நடத்தையும், உன் உடம்பை பற்றிய வசமாகத்தான் இருக்கும். அதை நொட்டாங் கையில தட்டிவிட்டுட்டு போயிக்கிட்டே இருக்கணுமுன்னு சொல்லிக்கொடுத்த பாடத்தைத்தான் இன்று வரை கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறேன். 
 

ஆனால் இன்றைக்கு பொதுவெளிக்கு வருகிற இளைஞர்களுக்கு, பெண்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கி, அவர்கள் எதை பேசினாலும், எழுதினாலும் அடக்க, ஒடுக்க நினைக்கிறார்கள். சாதாரணமானவர்களை அவர்கள் கை வைப்பதில்லை. திராணியோடு, தெம்போடு, அரசியல் அறிவோடு பொதுவெளிக்கு வருபவர்களை குறிவைத்து கை வைக்கிறார்கள். அரசியலில் பெண்கள் திரளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
 

அரசியலாக பெண்கள் திரளக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ். பாஜக போன்ற அரைவேக்காட்டு கும்பலை அடித்து விரட்டுகிற வேலையை எங்கள் செம்படை செய்யும். 
 

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றால், சாமி கும்பிடும்போது ஏன் சமமில்லை. எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு பெண்களை கூப்பிட்டு போயிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். செம்பூமி, காவிபூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார்கள். இந்த பூச்சாண்டிக்கு அஞ்சுகிற ஆளு நாங்க கிடையாது. நாங்கள் சமூக நீதிக்கு எதிராக ஒருபோதும் நின்றதில்லை. 
 

நாங்கள் கொள்கைவாதிகள். கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறோம். உயிரையும் கூட. நான் நடுநிலைவாதி இல்லை. நீதிக்கும், அநீதிக்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்க்க எனக்கு ஒருபோதும் கற்றுத்தரவில்லை. நாங்கள் நீதியின் பக்கம்தான் நிற்போம். அதற்கு எந்த விலையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். உங்கள் கத்தி, துப்பாக்கி எதுவாக இருக்கட்டும், எதிர்கொள்வதற்கு செம்படை தயார். இவ்வாறு பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்