ராஜ ராஜ சோழனின் வரலாற்றையும், வே.பிரபாகரன் வரலாற்றையும் சீமான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்கப் போவதாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல், ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பேரரசு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்னர் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், வே.பிரபாகரன் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, வெற்றிமாறன் இயக்குவார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்” என கூறியுள்ளார்.