Skip to main content

பெற்றோர்களின் தொடர் புகாரை அடுத்து விசாரணை வலையத்துக்குள் வந்த தனியார் பள்ளி!!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021
Private school in the investigation zone following a series of complaints from parents

 

கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா இரண்டாம் அலைவரிசை காரணமாக பள்ளிகள் திறப்பதில் அரசுத் தரப்பில் குழப்பம் நிலவி வருகிறது. இப்படி மூடப்பட்ட பள்ளிகள் பலவற்றில் இருந்து பிள்ளைகளின் நலன் கருதி  அவர்களுக்கான பாடங்களை கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், இணையவழி மூலமாகவும்  பாடம் நடத்தப்பட்டு வந்தது.  ஊரடங்கு காரணமாக  பல தரப்பு குடும்பத்தினரும்  வருமானம்  இல்லாமல், குடும்பம் நடத்துவதற்கு மிகவும் தத்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில்  தனியார் பள்ளிகளில்  படித்துவந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில்  75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

 

கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களை  தொந்தரவு செய்யக்கூடாது  என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது, ( முழு கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் பலமாக ஒலிக்கிறது மக்கள் மத்தியில்). இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் பிள்ளைகளின் கல்விகட்டணம் குறித்து பெற்றோர்கள் வேதனையில் துடித்து வருகிறன்றனர். இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்த கூறி நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக விழுப்புரம் கிழக்கு, புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துமாறு  பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.

 

Private school in the investigation zone following a series of complaints from parents

 

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, கோட்டாட்சியர் திருமாறன் ஆகியோர் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நெரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்ட விவரம், பள்ளி சேர்க்கையில் உள்ள மாணவர்களின் விவரம், கல்விக் கட்டணம் வசூலித்ததற்கான ஆவணங்கள், மாணவர்களிடம் எந்தவித அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விவரம் ஆகியவற்றை பள்ளி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணையின் மூலம் கேட்டறிந்தனர்.

 

இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம்  கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்படும். இருதரப்பு விசாரணை முடிந்த பிறகு அந்த விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அரசுக்கு தெரியப்படுத்தி மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடுவார் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

 

இந்த முறையில் பிள்ளைகளுக்கான கல்வி முழுமையாக போய் சேரவில்லை காரணம் அனைத்து பெற்றோர்களிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்து இருப்பது சிரமம். மேலும் பிள்ளைகள் இதன் மூலம் எல்லோரும் ஆர்வமுடன் கல்வி கற்றுக் கொள்ள முன்வருவார்களா என்பது பெரிய கேள்விக்குறி. மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கின்ற சூழலிலும் கட்டணத்தை மட்டும் பறிக்கும் நோக்கத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்பது போல வருமானம் இன்றி தவிக்கும் பெற்றோர்களிடமிருந்து கல்விக் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்