வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சேலம் மத்தியச் சிறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கைதியாக இருந்த சிவக்குமாரை டி.ஐ.ஜி வீட்டில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை சிவக்குமார் திருடியதாகக் கூறப்படுகிறது. சிறை அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் சிவக்குமாரின் தாயார் தன்னுடைய மகன் திருடியதாக போலீசார் சித்திரவதைப்படுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த புகாரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சேலம் மத்தியச் சிறையில் உள்ள கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிபிசிஐடி போலீசார் காலை 10 மணி முதல் சேலம் மத்தியச் சிறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வேலூர் டி.ஐ.ஜி ராஜலக்ஷ்மி, கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.