Skip to main content

'மலைகளின் இளவரசி மருத்துவத்துறையின் இளவரசியாக காட்சியளிக்கிறது'- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

'Princess of the Mountains presents as the Princess of Medicine' - Minister Ma Subramaniam's speech!

 

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு தனிநபர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றைத் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

 

கொடைக்கானல் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகப்பேறு உதவித்தொகை, 100 சதவீதம் கரோனா ஊசி செலுத்திய நகராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குதல் போன்றவற்றை வழங்கினார்.

 

அதன் பின் அமைச்சர் பேசும் போது... ''கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான 30 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் கடந்த 1946 ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அது மிகவும் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு திட்டம் தயாரிக்கப்பட உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அங்கு விரைவில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் பகுதியில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இங்கு மூன்று இடங்களில் அரசு மருத்துவமனைகள், 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 துணை சுகாதார நிலையங்கள், ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளது. இவற்றுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும். பூம்பாறை பகுதியில் சுமார் 87 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

 

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவ ஆஸ்பத்திரி ஆக தரம் உயர்த்தப்பட்டு அதனை சீரமைக்க சுமார் 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது கொடைக்கானல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தது. மலைகளின் இளவரசி மருத்துவத்துறையின் இளவரசியாக காட்சியளிக்கிறது. கொடைக்கானல் நகராட்சி பகுதிகள்தான் முதன் முதலாக 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது தவணையை சுமார் 92 சதவீதம் அளவுக்கு போடப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். திண்டுக்கல் மாவட்டம் தடுப்பூசி போடுவது சாதனை படைத்துள்ளது.

 

'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நேற்று வரை சுமார் 73 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். முதல்வரின் விருப்பப்படி விரைவில் ஒரு கோடி பேருக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டம் வீடு தேடிச் சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு, பாப்பம்பட்டி, எரியோடு, வடமதுரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது'' என்று  கூறினார்.

 

இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசும்போது, 'தமிழக அரசு பொறுப்பேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மா.சுப்பிரமணியன் எங்கு சென்றாலும் ஆய்வு நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். பழனி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த எட்டு மாத காலத்தில் பல்வேறு வேலை செய்து கொடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரி, பழனி அரசு மருத்துவமனைக்கு சுமார் 78 கோடி ரூபாய்களை வழங்கி உள்ளார். கொடைக்கானலில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் விடுதி கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மத்திய அரசு அனுமதி பெற்று மேலும் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் காலியாக உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'' என்று கூறினார்.

 

இந்த விழாவில்  நகரசபைத் தலைவர் செல்லத்துரை துணைத் தலைவர் மாயக்கண்ணன், ஆர்டிஓ முருகேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் ராஜதுரை, நகர செயலாளர் முகமது இப்ராஹிம் உட்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பிரதமர் சொல்வது அதிசயமான ஒன்றாக உள்ளது' - அமைச்சர் மா.சு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
 'What the Prime Minister is saying is something amazing' - Minister Ma.su interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது  முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

Next Story

மீண்டும் அரங்கேறிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சம்பவம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மலை பிரதேச பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதி அதிக குளிராக இருப்பதால், கோடை காலத்தில் அதிகமான நபர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளான, கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆபத்து நிறைந்த குணா குகைக்கு தடையை மீறி செல்கின்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விடும் ஒருவரை, அவரின் சக நண்பர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படம் வெளியானது முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து, கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் கிடைத்த விடுமுறை தினத்தில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 22 வயதான தனராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், வழக்கமாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அது அனைத்தையும் செய்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அவரவர் புகைப்படங்களை வித விதமாக எடுத்து மகிழ்ந்துள்ளனர். பின்னர், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இந்தப் பகுதி கொடைக்கானலில் உள்ள ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்தப் பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன், டால்பின் நோஸ் பாறை பகுதியின் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கால் சட்டென்று வழுக்கியுள்ளது. உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே இருந்து அலறியபடி பொத்தென்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் தனராஜ். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் நண்பர்கள், அந்த ஆபத்தான இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

கை கால்களில் பலத்த காயங்களுடன் தனராஜ் கீழிருந்து கதறியுள்ளார்.உடனே அவரின் நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் என அனைவரும் உடனடியாக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டுள்ளனர். கீழே விழுந்த தனராஜிக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இதன் காரணமாக படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமில்லை. இது ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் இருக்கிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.