Skip to main content

பகலில் அர்ச்சகர், இரவில் திருடன்; கோவில் நகை முதல் இருசக்கர வாகனம் வரை  திருட்டு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
priest stole everything from temple jewels to two-wheelers

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் சங்கராபுரம் நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொளத்தூர் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கணியாமூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் கனியாமூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும் வயிற்று பிழைப்பிற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாசார் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரான ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்பிலான ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷ் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசாரின் தீவிர வாகனத்தை அணியின் காரணமாகவும் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; டவர் மேல் ஏறிய வேட்பாளரால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rejection of nomination in by-election; A sensation by the candidate who climbed to the top of the tower

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக நடத்துநர் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா,திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.