Skip to main content

குடியரசுத் தலைவரின் நீலகிரி வருகை; உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் 'முதுமலை'

Published on 03/08/2023 | Edited on 04/08/2023

 

President's visit to Nilgiris; Mudumalai within the high security ring

 

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வர இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

நீலகிரி வரும் குடியரசுத் தலைவர், ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியினரை நேரில் சந்தித்து பின்னர் முதுமலை தெப்பக்காடு முகாமை பார்வையிட்டு அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களைச் சந்திக்க உள்ளார். இதனால் தற்பொழுது தெப்பக்காடு பகுதியானது காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தெப்பக்காடு வரும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வனத்துறை உயர் அதிகாரிகள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், அரசு ஊழியர்கள் எனப் பலரும் பங்கேற்று குடியரசுத் தலைவர் வருகை நிகழ்ச்சி பாதுகாப்புகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.

 

குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் வர இருப்பதால் மசினகுடியில் ஹெலிகாப்டர் தரையிறக்குவதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்றது. மேலும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக முதுமலை புலிகள் காப்பகம் ஐந்து அடுக்கு உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி ட்ரோன்கள் பறக்க வனத்துறை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்