திருவிழாக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர், கூடாரம் எழுப்புவோர், ஒலி, ஒளி அமைப்போர், விளம்பரம் செய்வோர், புத்தகச்சுமை தூக்குவோர், சுகாதாரப் பணி மேற்கொள்வோர், நாற்காலிகள் போடுவோர், மின்பொறியாளர்கள், புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள், அச்சுப்பணி சார்ந்தோர், செக்யூரிட்டி, பார்க்கிங் என ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டம் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் நேற்று (13.07.2023) நடைபெற்றது.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் தனித்தன்மை பற்றியும், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து புத்தகத் திருவிழாவின் சிறப்புக்கும் வெற்றிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கும் பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றியும் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் விளக்கவுரையாற்றினார். பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்றோர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும் வளரும் தலைமுறை, பள்ளிப் பருவத்திலிருந்தே பாடப்புத்தகங்களோடு சேர்த்து தரமான பொதுப் புத்தகங்களையும் வாசித்து அறிவிற்சிறந்தவர்களாகவும், பண்பில் மேம்பட்டவர்களாகவும் அறிவியல், இலக்கியம், வரலாறு,மொழியியல், அரசியல் போன்றவற்றில் ஆழத்தடம் பதித்து, உலகப் பார்வை உள்ளவர்களாகவும் பேச்சு, எழுத்து உள்ளிட்ட பல்வகைத் தனித்திறன்களை வளர்த்துக் கொள்பவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதே மக்கள் சிந்தனைப் பேரவையின் எதிர்பார்ப்பு; நம்பிக்கை. இந்த இலட்சியத்தை மனதில் கொண்டு மாணவர்களுக்கான பல்வேறு தனிச்சிறப்புத் திட்டங்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க காலத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஒன்று 'நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்கும் திட்டம்’. அதன்படி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ. 250க்கு புத்தகங்களை வாங்கும் மாணவர்களுக்கு நூல்களின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விழா அரங்கிலேயே 'நூல் ஆர்வலர்′ என்ற சான்றிதழ் பேரவையின் சார்பில் வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பல ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைமுறையில் இருந்து வருகின்றது. பல்லாயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் இச்சான்றிதழை பெற்று மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.