Skip to main content

ஏழு வாரங்களுக்கு பிறகு இயங்க தொடங்கியுள்ள விசைத்தறிகள்...

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

The turbines that started operating after seven weeks

 

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, சோலார், அசோக்புரம், மொடக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டுவருகிறது. இந்த விசைத்தறிகள் மூலம் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் மற்றும் ஐம்பது லட்சம் மீட்டர் ஜவுளி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இவை மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான்,  குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதில் மூன்று லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் ஈடுபட்டுவருகிறார்கள். நாளொன்றுக்கு ரூபாய் 20 கோடி மதிப்பிலான வர்த்தகம் இங்கு நடைபெற்றுவந்தது.

 

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ரூபாய் ஐநூறு கோடி மதிப்பிலான உற்பத்தியான துணிகள் குடோன்களில் தேங்கியுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள் கடந்த ஏழு வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் இந்த தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினமும் பல கோடி மதிப்பிலான விற்பனையும் முடங்கியது. தற்போது தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதால் அரசு சார்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி 28ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதிவரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும்  தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோட்டில் விசைத்தறிகள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதிமுதல் ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் விசைத்தறிகள், கிட்டத்தட்ட 7 வாரங்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கியுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் விசைத்தறிகள் துணி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. இதனால் விசைத்தறியாளர்கள் மத்தியில் ஓரளவு நம்பிக்கை என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்