Skip to main content

பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
Postponement of university term exams

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுக் குறைந்து மேற்கு - வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதே சமயம் கனமழை காரணமாகத் தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழை எச்சரிக்கை காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், தேனி, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். அதோடு கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாகத் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (13.12.2024) நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று ஒத்திவைக்கப்பட்ட பருவ தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழை காரணமாகத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் இன்று நடைபெறவிருந்த பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்