Skip to main content

சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்! 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

 popular rowdy  passed away in Salem
காட்டூர் ஆனந்தன்

 

சேலம் அருகே கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட  ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் காட்டூர் ஆனந்தன் என்கிற  ஆனந்தன் (44). ரவுடியான  இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள்  பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். காட்டூர் ஆனந்தன் தன்  குடும்பத்துடன் வலசையூரில் வசித்து வந்தார்.    

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவு 9 மணியளவில் ஆனந்தன் தனது மனைவியிடம், காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச்சென்றார். அவருடன் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரும் சென்றார். உறவினர்களைச் சந்தித்துவிட்டு இரவு 10.30 மணியளவில், வலசையூர் திரும்பிக் கொண்டிருந்தார். காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை வழிமறித்தது.  

 

இதைக்கண்டு மிரண்டு போன காட்டூர் ஆனந்தன், அந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை சாலையோர  பள்ளத்தில் இறக்கினார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்த புதருக்குள் விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர், அங்குள்ள விவசாய நிலத்தின் வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார். ஆனாலும் விடாமல் விரட்டிச்சென்ற கொலைகார கும்பல் அவரை அரிவாள், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை  செய்தனர். 50 மீட்டர் தொலைவுக்கு அவரை விரட்டிச் சென்று கொன்றுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே காட்டூர் ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடன் சென்ற பிரபாகரனுக்கும் தாடையில் லேசான காயம் ஏற்பட்டது. காட்டூர் ஆனந்தன் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே கொலை கும்பல் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது.     

 

இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமண தாஸ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார், வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி ஆகியோரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் ஆனந்தன் சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

 

காட்டூர் ஆனந்தன் கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வலசையூர், வீராணம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலசையூர், அரூர் முதன்மைச் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கொலை நடந்த இடம் மாவட்டக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், கொலையுண்ட நபர் வசித்து வந்த இடம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வலசையூர் பகுதி என்பதால் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா தலைமையிலான  காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று விசாரித்தனர்.  காட்டூர் ஆனந்தன் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால், அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் பழிக்குப்பழியாக  இந்தக்கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

கொலை கும்பல், காட்டூர் ஆனந்தனின் நடவடிக்கைகளை பல நாள்களாக நோட்டமிட்டு வந்திருக்கலாம் என்றும், அதனாலேயே அவர் இரவு நேரத்தில் தனியாக வருவதை அறிந்து கொலை திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காட்டூர் ஆனந்தன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு அருகே வந்தபோது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  சம்பவத்தின் போது உடன் இருந்த ஆனந்தனின் கூட்டாளி பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையுண்ட சம்பவம், வலசையூர், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.