Skip to main content

அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Pommidi police registered a case against Annamalai

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம்  தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி (08-01-24) இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து கடந்த 7 ஆம் தேதி மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, லூர்து அன்னை மேரிக்கு மாலை அணிவிக்க அண்ணாமலை சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர்களும், கிறிஸ்தவர்களும், அண்ணாமலை உள்ளே செல்லக்கூடாது என அவரைத் தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், அங்கிருந்த இளைஞர்கள், ‘புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை அணிவிக்கக்கூடாது என்றும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், கிறிஸ்துவ மக்களை கொன்றதற்கும் தேவாலயத்தை இடித்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்’ என்றும் அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர்களிடம் அண்ணாமலை, “நாங்கள் எல்லாவற்றையும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் செய்கிறோம். அங்கு நடப்பது இரு பழங்குடியினர் இடையே நடக்கும் தகராறு. அதனால், நீங்கள் மதத்தை வைத்து எதுவும் கேட்கக்கூடாது” எனக் கூறினார். இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள், ‘மதத்தை வைத்து அரசியல் செய்வது யாரென்று மக்களுக்குத் தெரியும்’ எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை அவர்களிடம், “இலங்கையில் 2009இல் கலவரம் நடந்தது. அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்தனர். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. கட்சிக்காரர்களின் தூண்டுதலின் பேரில் நீங்கள் இப்படி செய்கிறீர்கள். தேவாலயத்திற்கு என்னை வரக்கூடாது என்று தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த சர்ச் உங்கள் பெயர்லயா இருக்கிறது? நான் தர்ணா செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

இப்படி இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்களை போலீசார் விலக்கி தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர், கூட்டத்தினர் அனைவரும் ‘வெளியே போ... வெளியே போ... பி.ஜே.பி.யே வெளியே போ’ என கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தினரை சமாதானப்படுத்திய போலீசார், அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.