முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்தைவிட கூடுதலாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.பி.அன்பழகன் 2016 முதல் 2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கே.பி.அன்பழகன் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்வதற்காக இன்று காலை சென்றுள்ளனர். அப்போது, அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது, அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கதவைத் திறந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், “நீங்க இங்க என்ன பண்றீங்க சார்” எனக் கேட்டுள்ளானர். அதற்கு அவர், “நான் இங்கு வாடகைக்கு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை அந்த வீட்டில் இருந்து வெளியேறக்கூடாது என்று தெரிவித்து அவரையும் அங்கேயே இருக்க வைத்துவிட்டு சோதனை மேற்கொண்டுவருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையின சோதனை முழுமையாக முடிந்த பிறகே பொள்ளாச்சி ஜெயராமன் வெளியே வரமுடியும் என்கிறார்கள் அங்கிருக்கும் காவலர்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் அதிமுக வி.ஐ.பிக்கள் வாடகை அடிப்படையில் அங்கு தங்கி சென்னையில் வேலை முடிந்ததும் அவர்கள் ஊர்களுக்குச் செல்வர் என்கிறார்கள் அதிமுகவினர்.