பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று (07/11/2022) உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி, அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் அரசியல் சட்டத்தின் இதயத்தில் அடிப்பது போல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், “பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த இட ஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்விலிருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களே “செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்” நீதிபதி ரவீந்திர பட் அவர்களின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவக் கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் அமைந்திருக்கிறது. அதனால்தான் “இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது” என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டித் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரபட் அவர்கள் தனது தீர்ப்பின் துவக்கத்திலேயே “நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாகப் பாரபட்சமுள்ள விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால் மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். இறுதியில் “இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச் செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பைத் தகர்க்கும் விதத்தில் உள்ளது” என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
ஆகவே நாட்டில் உள்ள 82 விழுக்காடு பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட சமூகநீதிக்காகத் தொன்றுதொட்டுப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் (review petition) தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.