
தூத்துக்குடியில் காவலரின் தாயார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் விக்ராந்த். அவருடைய தாய் வசந்தா சாத்தான்குளம் அடுத்த தேரிப்பனை கிராமத்தில் வசித்து வந்த நிலையில், உறவினர்கள் வழக்கம்போல வசந்தாவுக்கு எதேர்சையாக கால் செய்துள்ளனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து அவருடைய மகன் விக்ராந்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு சென்று நேரில் பார்த்தனர்.

கைது செய்யப்பட்ட இளம்பெண் செல்வரதி
அப்பொழுது படுக்கையறையில் வசந்தா உயிரிழந்து கிடந்ததோடு அவருடைய கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. நகையை பறிப்பதற்காக வசந்தா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். தொடர் விசாரணையில் நகையைப் பறிப்பதற்காக தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் கொலை செய்தது 24 வயது இளம் பெண் என்பது தெரிய வந்துள்ளது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நகைக்காக கொலையில் ஈடுபட்டது அதேபகுதியை சேர்ந்த செல்வரதி என்ற 24 வயது பெண் என்பது தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.