Skip to main content

தனி ஆளாக கார் திருடனை விரட்டிப் பிடித்த காவலர்... வீரதீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டுவந்த இருவர் கார் ஓட்டுநரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு இருவர் காரை கடத்திக் கொண்டு சென்ற தகவல் வாக்கிடாக்கி மூலம் தமிழகம் முழுவதும் போலீசார் சொல்லி இருந்தனர்.  இந்த கடத்தல் நடந்த அடுத்த நாள் கார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் அதிகம் கூடும் மணிக்கூண்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மெடிக்கலில் நின்ற பிரசாத் என்ற காவலர் இமைப் பொழுதில் அந்த கார், காரின் பதிவு எண்ணைப் பார்த்தவுடன் அது கடத்தல் கார் என்பதை முடிவுசெய்து உடனே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

 

தனது மோட்டார் சைக்கிளில் சென்று நிறுத்தச் சொல்லி சைகை காட்டியும் நிறுத்தாமல் காரை சென்றதால் பின்னாலேயே விரட்டிச் சென்ற போது காரை நிறுத்தி இருவர் வெவ்வேறு திசையில் ஓட, காவலர் பிரசாத்தும் ஒருவன் பின்னால் ஓடி எட்டிப் பிடிக்க முயன்று சாலையில் விழுந்து ரத்த காயமடைந்தும் தொடர்ந்து விரட்டிச் சென்று மதுரை வேலுப்பாண்டி என்பவனைப் பிடித்ததுடன் கடத்தல் கார், காரில் இருந்த ஆயுதங்கள், செல்போன்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

 

இந்த தகவல் அறிந்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனே பாராட்டி ஊக்கத் தொகை ரூ.25 ஆயிரம் அறிவித்ததுடன் காவலர் பிரசாத்துக்கு போனில் பாராட்டும் தெரிவித்தார். தஞ்சை எஸ்.பி ரவளிப் பிரியா கந்தபுனேனி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார். தொடர்ந்து பிரசாத்தின் சொந்த கிராமமான புனல்வாசல் கிராம மக்கள் உள்படப் பலரும் பாராட்டிவரும் நிலையில் சென்னை எஸ்.பி சரவணன் பரிசுப் பொருட்களை வழங்கி இருந்தார்.

 

இந்தநிலையில் தனி ஆளாக கார் திருடனையும், காரையும் பிடித்துக்கொடுத்த காவலர் பிரசாத்துக்குத் தமிழக அரசின் வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கத் தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா கந்தபுனேனி பரிந்துரை செய்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்