வழிப்பறி திருடர்களை இப்போதெல்லாம் போலீஸ் பிடிக்கிறதோ, இல்லையோ, அங்கங்கே வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துவிடுகின்றன. இன்று பகல் 1-10 மணிக்கு சிவகாசியில் நடந்த செயின் பறிப்பும் அப்படித்தான் இரு இடங்களில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
சிவகாசி குட்டியனஞ்சான் தெருவைச் சேர்ந்த சுந்தரிக்கு வயது 65 ஆகிறது. மதியவேளையில் அவர் தன் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞன் செல்போனில் பேசியபடியே பின் தொடர்கிறான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்செயினை அவன் பறிக்கும்போது சுந்தரி கிழே விழுகிறார். செயின் கைக்கு வந்ததும், அந்தத் திருடன் ஓடுகிறான். சுந்தரி கூச்சல் போட, அந்த ஏரியாவில் வீட்டுக்குள் இருந்த இரண்டு ஆண்கள், வெளியே ஓடிவருகிறார்கள். ஆனாலும், யார் கண்ணிலும் சிக்காமல், பிடிபடாமல் அடுத்தடுத்த தெருக்கள் வழியே ஓடி தப்பிவிடுகிறான்.
அந்த சிசிடிவி பதிவில் செயின் பறிப்பு திருடனின் முகம் நன்றாகவே பதிவாகியிருக்கிறது. வழக்கு பதிவு செய்த சிவகாசி டவுண் காவல்நிலைய போலீசார் அவனைத் தேடிவருகின்றனர்.
சிவகாசி பகுதியில் தொழில்கள் பலவும் முடங்கிவிட்ட நிலையில், இதுபோன்ற திருட்டுக்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆதாரம் இருந்தாலும், வழக்கு பதிவு செய்வதிலோ, திருடனைப் பிடிப்பதிலோ போலீசார் அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புலம்புகின்றனர்.