nkl

Advertisment

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளராகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியராகவும் இருந்தவர் மருது அழகுராஜ். ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக மருது அழகுராஜ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து தானாக விலகினார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான சில விவரங்களைப் பற்றி தெரிவித்தார். அதே சந்திப்பில், கோடநாடு வழக்கு விசாரித்துவரும் தனிப்படை முன்பு ஆஜராக தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருது அழகுராஜுக்கு தனிப்படை போலீசார் நேரில் ஆஜராக அழைப்பு விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆஜரான அவரிடம் 5 மணி நேரம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடியின் நண்பர் சேலம் இளங்கோவனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.