தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் ஒருபக்கம் கள்ளசாராயம் தலைவிரித்தாடியது. மற்றொரு பக்கம் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து விற்பனை செய்யும் செயல்கள் நடைபெற்றன. இதில், சமீபத்தில் லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாஞ்சூர் பகுதிக்குச் சென்று மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு வரும்போது லால்குடி காவல்துறையினர் சோதனைச் சாவடியில் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அதில் 30 பாட்டில்களை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, காரின் கதவுகளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட 120 மது பாட்டில்களை ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களை வைத்து போலீசே விற்பனை செய்துள்ளனர். அதேபோல் சமயபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அதில் பிடிபட்ட மது பாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து, அந்தந்த ஊர்களில் உள்ள கரோனா பாதிப்பு குறித்து அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக, இப்படிப்பட்ட மதுபாட்டில்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலமாகவே விற்பனையும் செய்துள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கில், இப்படிப்பட்ட மதுபாட்டில்களில் பெயருக்கு இருபது அல்லது முப்பது பாட்டில்களை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, மற்ற பாட்டில்களை விற்பனை செய்யும் பணியை காவல்துறையினரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.