
திருச்சி மாவட்டம், கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் எஸ்.பி.ஐ வங்கி அருகில் காபி கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1500 பறித்த வழக்கில் அபுஜி (எ) அபுதாஹீர்(34) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அபுதாஹீர் கண்டோன்மெண்ட் பகுதியில் கல்லூரி மாணவர்களைத் தாக்கி பணம் மற்றும் நகைகளைப் பறித்ததாக ஒரு வழக்கும் பொதுமக்களை ஆயுதங்களால் அச்சுறுத்தி பணம் கொள்ளையடித்ததாக 3 வழக்குகளும், கொலை மற்றும் உயிருக்கு ஊறுவிளைவித்ததாக 5 வழக்குகளும் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, அபுதாஹீர் தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், அபுதாஹீரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையில் உள்ள அபுதாஹீர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதியப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.