Skip to main content

'காவல்துறையின் மெத்தனம்; நியாயப்படுத்த விரும்பவில்லை'-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 'Police laxity; I don't want to justify'- Minister AV Velu interviewed

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 'Police laxity; I don't want to justify'- Minister AV Velu interviewed

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் செய்தியாளரை சந்தித்தனர். அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ''கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உள்ளனர். நாங்கள் வரும்பொழுதே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்னென்ன சிகிச்சைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்லாவற்றையும் விசாரித்தோம்.  நாங்கள் மருத்துவர்களிடம் கேட்கின்ற பொழுது 9 பேர் அபாய நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஸ்டேபிளாக உள்ளார்கள். எப்படியும் எல்லாரையும் காப்பாற்றி விடலாம் என தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசை பொறுத்தவரை எல்லா நடவடிக்கையும் அரசு எடுத்திருக்கிறது. அதேநேரத்தில் முதல்வர் காவல்துறை கொஞ்சம் மெத்தனமாக இருந்தது என்பதை அவருடைய அளவுக்கு தெரிந்த காரணத்தினால் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

 

இங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட இதில் ஈடுபட்டுள்ள மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் 10 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மருத்துவர்கள் தேவை என்றால் அனுப்பி வைப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டுகளிலும் இரண்டு டாக்டர்கள் இரண்டு, செவிலியர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சி உள்ளவர்கள் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் எடுக்கும்.'' என்றார்.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.

சார்ந்த செய்திகள்