சிதம்பரம் அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக டீசல் பங்க் உள்ளது. இதில் கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சுதாகர் ( 51) பண்ருட்டி ரெட்டிபாளையம் ஜெயராமன் மகன் செல்வகுமார் (38) இருவரும் டீசல் பங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக டீசல் பங்கில் வசூலான பணத்தை செல்வகுமார் சுதாகரிடம் கொடுத்துவிட்டு வங்கி கணக்கில் கட்டுமாறு சென்று விட்டார். தொடர்ந்து வங்கிகள் விடுமுறை என்பதால் சுதாகர் பணத்தை வீட்டில் வைத்திருந்து திங்கள் காலை சிதம்பரம் மேலவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வங்கி கணக்கில் ரூ 6 லட்சத்து 4,500 கட்டியுள்ளார். பணத்தை வாங்கிய மேலாளர் வீரபத்திரன் அதில் கள்ள நோட்டு இருப்பதைக் கண்டறிந்து இதுகுறித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன் பெயரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்த போது அதில் ரூ 52 ஆயிரம் நகல் எடுக்கப்பட்ட கள்ள நோட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.