Skip to main content

கொள்ளையனை தூங்க வைத்த டி.ஆர்; திருட வந்த இடத்தில் சுவாரஸ்யம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

police have arrested thief who fell asleep listening T rajendar song place theft.

 

திருட வந்த இடத்தில் டி.ஆர் பாடலைக் கேட்டு அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தற்பொழுது காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் தன் சொந்த ஊரான நடுவிக்கோட்டைக்கு திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். மேலும், இங்கு குடும்பத்தோடு வந்து தங்கினால் வீட்டில் சமைப்பதற்கான பாத்திரங்கள் மற்றும் குத்து விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறை மட்டும் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த அறைக்குள் திருடன் இருப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வீட்டின் உரிமையாளர் பாண்டியனுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவ அனைவரும் மிளகாய்ப் பொடி, கம்பு கட்டையுடன் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசும் பாண்டியன் குடும்பத்தினரும் மூடப்பட்டிருந்த மற்றொரு கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், அங்கிருந்த கட்டிலில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை எழுப்பி விசாரித்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுதந்திர திருநாதன் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற நிலையில், சமீபத்தில் தான் ரிலீஸாகி வந்துள்ளார். இதனிடையே, பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட சுதந்திர திருநாதன், ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கலப் பொருட்கள் என அனைத்தையும் சாக்குப் பையில் பத்திரமாகக் கட்டி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு, மது அருந்திய சுதந்திர திருநாதன், ஹெட்ஃபோனில் TR ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, அங்கிருந்த மெத்தையில் சுதந்திரமாகத் தூங்கியுள்ளார். இவர், ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியதால் வெளியே சத்தம் போட்டது கேட்கவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுதந்திர திருநாதனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சிவகங்கை மக்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் சம்பந்தமாக அதிரடி சோதனை

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
raid in Kalvarayan hill related to illicit liquor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராய சம்பவத்தில் 67 பேர் உயிர் இழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம் எனக் கூறப்படும் கல்வராயன் மலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட போலீசாருடன் கல்வராயன் மலையில் அதிரடியாக கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தச் சோதனையின் போது ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதி உள்ள இடங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு சோதனைகளை செய்துள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும்பணி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் இன்றைய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் தொடர்ந்து விடக்கூடாது எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சின்னசேலம் பகுதி வழியாக கல்வராயன் மலை கரியாலூர் வெள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு சென்ற இவர்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சேராப்பட்டு என்ற மலைப் பகுதிக்கு சென்று அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னர். சோதனை முடிந்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி சங்கராபுரம் வட்டம் வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.

Next Story

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.