புல்லட்டில் போனவர் சீல் பெல்ட் போடவில்லை என்று வாகன சோதனையில் நின்ற போலிசார் அபராதம் வசூலித்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் ராஜபிரபு (வயது 31). பொறியியல் பட்டதாரி. அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தின் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் பணிகளில் மேற்பார்வையாளராக உள்ளார். 21 ந் தேதி ராஜபிரபு தனது மனைவியுடன் தனது புல்லட்டில் பிள்ளையார்பட்டிக்கு சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கே.புதுப்பட்டி போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் போடாமல் வந்த ராஜபிரபு வை நிறுத்தி ரசீது போட்டு ரூ 100 அபராதம் வாங்கிக் கொண்டு அனுப்பினார்கள்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது புல்லட்டில் சென்றவர் சீட் பெல்ட் போடவில்லை என்று ரசீது போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். புல்லட் ஓட்டவும் சீட் பெல்டா? என்ற நமது கேள்விக்கு சில போலிசார் வேதனையுடன் கூறியதாவது,
காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆள்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறைவான காவலர்களை வைத்துக் கொண்டு எந்த வேலையும் பார்க்க முடியல நிறைய புகார்கள் விசாரிக்கப்படாமலேயே கிடக்குது. இதுக்கிடையில பாதுகாப்பு பணிக்கு வேற போகனும். இது எல்லாத்தையும் விட ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வாகன சோதனை வழக்கு அபராதம் விதிக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு. இத்தனை பணிச்சுமைகளையும் சுமந்துகிட்டு தூக்கம் இல்லாம வீடுகளுக்கு போக முடியாம வாகன சோதனைகளுக்கு போகும் போது மனசு வேலை செய்ய விடுமா? பணிச்சுமையால மன அழுத்தம் அதிகமாகி மேல் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வேலை செய்யும்போது இதுபோல ஒன்றிரண்டு தவறுகள் எதிர்பாராமல் நடக்கிறது.
எங்களை சுந்திரமாக வேலை செய்யவிட்டால் தவறுகளுக்கு வழியின்றி பணிகள் நடக்கும் என்கின்றனர் வேதனையாக.