ஈரோடு பழைய ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த 32 வயது செல்வன் சேலம் காவல்துறையில் சேலம் ரூரல் டி.எஸ்.பி.யின் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வே ஸ்டேசனில் பெண் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர்கள் வசிக்கும் அதே குடியிருப்பு பகுதியில் 29 வயதான இளம் பெண் ஒருவரும் வசித்துவருகிறார். அவரும், ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் போலீசாக பணி செய்கிறார். இந்த பெண் போலீஸுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவருக்கு குழந்தையும் இல்லை.
தனியாக வசிக்கும் இளம் பெண் போலீஸிடம் நெருக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்ட செல்வன், தொடக்கத்தில் உதவி செய்வது போல் நட்பாக பழகியுள்ளார். அதை அந்த இளம் பெண் போலீசும் நம்பியிருக்கிறார். அதனை பயன்படுத்தி செல்வன், விடுமுறை நாளாள ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தப் பெண் போலீஸ் வீட்டிற்குள் சத்தமில்லாமல் நுழைந்து அவரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதில், அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், செல்வனிடமிருந்த தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அந்த இரவில் அருகே வசித்தவர்கள் வெளியே வர மக்களிடம் நடந்த சம்பவத்தை அப்பெண் போலீஸ் கூறியுள்ளார். உடனே ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் விஜயா அங்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பிறகு வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.