/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_179.jpg)
சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி. 34 வயதான இவர், சென்னை பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் இருந்த நிலையில், அதில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இத்தகைய நிர்க்கதியில் தள்ளப்பட்ட ராஜேஸ்வரி தற்போது வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு, தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், கடந்த 19 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ராஜேஸ்வரி எக்மோரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் சமோசா வியாபாரம் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜேஸ்வரி, அடுத்த பெட்டிக்குச் செல்வதற்காக பிளாட்பாரத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஸ்வரியைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் சிக்கிய ராஜேஸ்வரி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது அவரை அந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிவிட்டு, அதே ரயிலில் ஏறித்தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் ராஜேஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த இடத்தில இருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, அங்கிருந்த சில பயணிகளின் உதவியோடு படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரம், ஆள்நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில், ராஜேஸ்வரிக்கு நான்கு கணவர்கள் என்பதால், இந்தக் கொலையில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இத்தகைய சூழலில், போலீசாரின் சந்தேகம் ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளி மீது திரும்பியது.
அப்போது, நாகவள்ளி குறித்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் இந்தக் கொலைக்கு மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டதே நாகவள்ளிதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரியின் தங்கையான நாகவள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது, அவரது அக்காவான ராஜேஸ்வரிக்குத்தெரிய வரவே, நாகவள்ளியைக் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்கையின் ஆண் நண்பரான சக்திவேலையும் மிரட்டியுள்ளார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நாகவள்ளி தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து பழகிவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், ராஜேஸ்வரி மீது ஆத்திரமடைந்த நாகவள்ளி அவரைக் கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தனது ஆண் நண்பரான சக்திவேலையும் தூண்டிவிட்டுள்ளார். அதன்படி, சக்திவேல் தனது கூட்டாளிகளை அழைத்து வந்து, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ராஜேஸ்வரியை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நாகவள்ளியைக் கைது செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது தனது அக்கா ராஜேஸ்வரியின் சடலம் முன்பு நாகவள்ளி குத்தாட்டம் போட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே, ஆடி முடித்துக் களைப்பில் இருந்த நாகவள்ளியைப் போலீசார் அந்த இடத்திலேயே கைது செய்தனர். அதோடு நாகவள்ளியின் ஆண்நண்பரான சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, ஜெகதீசன் மற்றும் ஜான்சன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அதே சமயம், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த அக்காவை, சொந்தத்தங்கையே கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)