வேலூர் அருகே ரயில்வே மேம்பாலத்தைத் தன்னிச்சையாகத் திறந்து வைத்ததாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே அப்புவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காட்பாடி ரயில்வே நிலைய மேம்பாடு பணிகள் நிறைவடைந்து நேற்று (01/07/2022) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பாலத்தை அப்பு தானாக திறந்து வைத்தார். இதுபற்றி வருவாய்த்துறையினரின் புகாரின் பேரில் அத்துமீறல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத ஆறு பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான அப்புவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் மாவட்டம், காட்பாடியில் பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர், இச்சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்திய, வேலூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள இந்த விடியா தி.மு.க. அரசின் அடக்குமுறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.