Police arrested a BJP worker who had a dispute with a bank employee

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வங்கியொன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியிலேயே அதற்கான ஏடிஎம் மையமும் இணைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு மணவாள நகர் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஏடிஎம் எந்திரத்தை வங்கியின் சார்பில் சர்வீஸ் செய்துள்ளனர். இதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினைசர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு உதவியாக அந்தத் தனியார் வங்கியைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வந்துள்ளார். இவர், பாஜக கட்சியின் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக உள்ளார். உள்ளே ஆட்கள் நிற்பதைப் பார்த்த பின்னரும் அபிலாஷ் நேராக உள்ளே சென்றுள்ளார். அங்கு சென்றவர் தனது ஏடிஎம் கார்டை எடுத்து, ஏடிஎம் மிஷினில் நுழைத்துள்ளார். அப்போது, அங்கு சர்வீஸ் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், சார்.... இப்போ பணம் எடுக்க முடியாது சார்.... ஏடிஎம் மிஷினை சர்வீஸ் பண்றோம்... எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும், கடுப்பான அபிலாஷ், அவர்களை திட்டியதாக சொல்லப்படுகிறது. உடனே சர்வீஸ் செய்துகொண்டிருந்த ஊழியரும் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஆகியுள்ளது. இதனைக் கவனித்த அந்த வங்கியின் அசிஸ்டண்ட் மேனஜர் பிரதீப், அங்கு ஓடி வந்துள்ளார். அங்கு வந்தவர், அங்கிருந்த பாஜக நிர்வாகி அபிலேஷிடம் சென்று, சார்.... இந்த மிஷினில் சர்வீஸ் செய்யும் பணி நடக்கிறது சார்... இப்போ பணம் எடுக்க முடியாது... தயவு செய்து புரிஞ்சிக்குங்க.. என எடுத்துக்கூறியுள்ளார்.

Advertisment

இதனைக் கேட்ட பிறகும், அவர் ஏடிஎம் மிஷினை விட்டு வெளியே வராமல் நான் இதில்தான் பணம் எடுப்பேன் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான உதவி மேலாளர், அபிலேஷை முதலில் வெளியே போங்க சார்... என சத்தமாக கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அபிலாஷ், வாய்க்கு வந்தபடி உதவி மேலாளர் பிரதீப்பை திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்கு வாதம் நடந்துள்ளது.

இந்த வாக்கு வாதத்தால் மேலும் ஆத்திரமடைந்த அபிலாஷ், வங்கி உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் வங்கி ஊழியர், பாஜக நிர்வாகியால் தாக்கப்படுவதைப் பார்த்த மற்ற ஊழியர்கள், மணவாள நகர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த அபிலாஷிடம் வங்கி ஊழிர்களிடமும் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். ஆனால், அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகி போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனையடுத்து, பாஜக நிர்வாகி அபிலாஷை கைது செய்த மணவாள நகர் போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அபிலாஷ் வங்கி ஊழியரை தாக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இதன் காரணமாக சம்பவம் நடந்த ஏடிஎம் மிஷினில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ள நிலையில், குஷ்பு உட்பட பாஜகவினர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்புவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.