விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்தியாநகரைச் சேர்ந்தவர் ராமர். 60 வயதான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதான ராமசாமி குடும்பத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறியுள்ளார். அதற்கு ராமர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இரு குடும்பத்துக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ராமசாமி, அவரது மகன்களான ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கற்கள் மற்றும் இரும்புக் கரண்டியால் தாக்கினர். இதில் காயமடைந்த ராமர், மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கடந்த மே 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, தலைமறைவான ராம்குமார் மற்றும் பெண் ஒருவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மே 28 ஆம் தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த ராம் குமாரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் முதியவர் ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணையும் கைது செய்த போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் பல அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. முதியவர் ராமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 45 வயதான பெண் சத்திய ஷீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருவதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராம்குமாரும், சத்திய ஷீலாவும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக ராம்குமார் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதன் பிறகு தவறாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ராம்குமார் அவரிடம் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். பின்னர், மதுரையைச் சேர்ந்த ஒரு டிஎஸ்பியுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு, பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. மறுபுறம் டிஎஸ்பியுடன் பழக்கம் இருக்கும்போதே பெண் இன்ஸ்பெக்டருடன் ராம்குமார் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் டிஎஸ்பிக்கும், ராம்குமாருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இதற்கிடையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல்நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில, அதிரடியாக ராமநாதபுரம் டிஐஜி துரை, பெண் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் கொலை வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ராம்குமாரை கைது செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார், இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் முதியவர் ஒருவரை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர், காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.