ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின.
இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர்.
அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.