கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி, அம்மன் கோவில் தெருவைத் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி(19). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 08.04.2019 மாலை தனது வீட்டில் தனியாக இருந்தபோது, பேரலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் என்பவன் வீட்டினுள் புகுந்து, வயிற்றுப் பகுதி மற்றும் கைகளில் சராமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டான்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அப்பெண்ணின் மாமா மற்றும் அவரது பெற்றோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலிசார் தீவிர விசாரணை செய்து ஆகாஷை கைது செய்தனர். இதனிடையே கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.
மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த திலகவதியின் உடலை பா.ம.க மாநில தலைவர் ஜி.கே. மணி நேரில் பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அதையடுத்து கொலையாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும், கொல்லப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேசமயம் திலகவதியின் உறவினர்களும், பா.ம.கவினரும் கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதுடன் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளதாகவும் எனவே பெண்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.