pmk leaders salem district mecheri police investigation

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கடந்த டிச. 30- ஆம் தேதி பா.ம.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Advertisment

அதன்படி, சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க பா.ம.க.வினர் கும்பலாக வந்திருந்தனர். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த 3 பேர், சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் போல் கடா மீசையுடன் வேடமிட்டு வந்திருந்தனர்;கையில் எஸ்.பி.எம்.எல். ரக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தனர். ஒன்றிய அலுவலக வாயிலில் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Advertisment

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பி.டி.ஓ. அலுவலக ஊழியர்கள், இதுகுறித்து மேச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையறிந்த வீரப்பன் வேடமிட்ட மூன்று பேரும் அங்கிருந்து அவசர அவசரமாக ஒரு வேனில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மேச்சேரி வி.ஏ.ஓ. சந்தோஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினர். வீரப்பன் வேடமிட்டு வந்தவர்கள் பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கையில் வைத்திருந்தது மரக்கட்டையில் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.எனினும், அரசு அலுவலகத்திற்குப் பிறரை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் வந்தது குற்றச்செயல் என்ற அடிப்படையில் அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.