Skip to main content

பிரதமர் மோடியின் அறிவிப்பு; ப. சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
PM Modi's announcement; P. Chidambaram questions

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் பற்றிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கினார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் அமையும். கிக் (ஆன்லைன் டெலிவரி) தொழிலாளர்களுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றும். இது ராஜஸ்தான் கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 10 கோடிகள் என மொத்தம் 5000 கோடிகள் தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் 1 வருடக் கட்டாய பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்வுகளின் போது வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் வலுவாக்கப்படும். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதன நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அறிவித்த 5 வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைப்போம். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. 42 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆனால் பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மத்திய அரசு ஏமாற்றுகிறது. தேர்தல் நெருங்குவதால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விலையை மேலும் குறைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாது என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி தர முடியுமா. பிரதமர் மோடி யாரையெல்லாம் கடுமையாக விமர்சிக்கிறாரோ அவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கிறது. தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொன்றையும் யார் வாங்கினார்கள் என்பதும், யார் பணம் கொடுத்தார்கள் என்பதும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

PM Modi's announcement; P. Chidambaram questions

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

சார்ந்த செய்திகள்