பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பிறகு ராமநாதபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் இன்று காலை முதல் பிற்பகல் வரை அடைக்கப்படுகிறது. அதேபோல், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் வரை செல்லும் பஞ்சக்கரை சாலை வழி நெடுகிலும், தூய்மைப்படுத்தும் பணியும் நடந்தது. சாலையோர சுவர்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் வருகையையொட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து கண்காணிப்பு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய வர உள்ள நிலையில், அதற்காக 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் வருகையையொட்டி கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த விவசாய சங்கத் தலைவரை போலீஸார் திருச்சியில் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் மோடி திருச்சி வருவதையொட்டி, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டார். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்தனர். மேலும் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனக் கூறியதுடன், அவரை போலீஸார் திருச்சி தில்லைநகர் அண்ணாமலை நகரில், வியாழக்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், “விவசாயிகள் வருவாயை இருமடங்கு அதிகரிப்பதாக கூறி பதவிக்கு வந்த பிரதமர் மோடி அதன்படி செய்யவில்லை. நாட்டில் 95 கோடி விவசாயிகளின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பிரமதர் வருகையின்போது போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்து, காவல்துறையில் அனுமதி கேட்க புறப்பட்டபோது என்னை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனக்கூறி வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எந்த அடக்குமுறை மேற்கொண்டாலும் அவற்றையும் மீறி பிரதமர் வரும்போது, விவசாயிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் மேற்கொள்வோம்” என்றார். அவருடன் மேலும் சில விவசாயிகளும் உடன் இருந்தனர்.